-கிறிஸ் தோமஸ்
2018 இல் இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் கடலோர நகரங்களில் ஒன்றான மன்னார் பகுதியில் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகளில் 28 மண்டையோடுகள் சிறுவர்களுடையதாக இருந்தது. கடினமான பாறைகளுக்குள்ளும் சேறுகளுக்குள்ளும் சிக்கியிருந்த என்புக் கூடுகளை அகழ்ந்தெடுப்பதைப் பார்ப்பதற்கே மிகவும் கொடூரமானதொரு காட்சியாக இருந்தது. தோண்டியெடுக்கப்பட்ட எச்சங்கள் எண்ணப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் உறைககளில் சேமிக்கப்பட்டு, அவை சார்ந்த எலும்புக்கூடுகளுடன் பொருத்தப்பட்டன.
ஒருபுறம் அகழ்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் உள்ளூர் பெண்களில் சிலர் தினமும் மனிதப் புதைகுழிகளை அண்மித்தவாறு ஒன்று திரளத் துவங்கினார்கள். 26 வருடங்களாக நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மனைவிமாரும் தாய்மாரும் சகோதர சகோதரிகளும் தான் அங்கே ஒன்று திரண்டவர்கள். மஞ்சள் நிற போலிஸ் தடுப்பு நாடாவிற்கு (Police Tape) அருகில் இருந்து அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள். அவ்வப்போது தங்களது கண்ணீரை அவர்களது கைக்குட்டைகளால் துடைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர். அரசின் மீது நம்பிக்கை இழந்த அவர்கள் அங்கிருந்த அரச அதிகாரிகளிடம் எதைப் பற்றியும் விசாரிக்காமல் தங்களோடு வந்திருந்த வழக்கறிஞர்களுடனும் அங்கே நின்று ஏனைய உள்ளூர் வாசிகளுடனும் தான் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்களது இந்த ஒன்றுகூடல் தாங்கள் நேசித்த தங்களை விட்டும் காணாமல் போன உறவுகளுக்கு நியாயம் தேடும் ஒரு அமைதி வழிப் போராட்டமாக அது இருந்தது.
ஆனால் இலங்கை அரசு இந்த அகழ்வாராய்ச்சி பணிகளுக்காக நியமித்த புளோரிடாவை மையமாக கொண்டு இயங்கும் கார்பன் பரிசோதனை குழு, அங்கு கண்டெடுக்கப்பட்ட ஆறு என்புக்கூட்டு எச்சங்கள் 15 மற்றும் 17ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டது. பல மாதங்களாக தனது குழுவினருடன் அந்தப் பகுதியில் பணிகளில் ஈடுபட்ட இலங்கையின் மூத்த அகழ்வாராய்ச்சியாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ இந்த ஆய்வு முடிகளை கேள்விக்குட்படுத்தினார். அவர் அங்கே அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மிகவும் அண்மித்த காலத்தை சார்ந்தவை என்றும் புதைக்கப்பட்ட மனித உடல்கள் எந்தவிதமான இறுதிச் சடங்குகளும் இன்றி புதைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். இறுதியில் இந்த அகழ்வாராய்ச்சி பெரும் புதிராக மாறி இலங்கையின் நீதிமன்றம் இதில் நேரடியாக தலையீடு செய்து இருக்கிறது.
அதேபோல் கடந்த ஜூன் மாதம், கட்டுமானத் தொழிலாளர்கள் குழுவொன்று, இலங்கையின் வட பகுதியில் உள்ள மற்றொரு பெரும்பான்மைத் தமிழர் வாழ் நகரமான முல்லைத்தீவில் வடிகால் குழாய்களை அமைப்பதற்காக தோண்டியபோது, இலங்கையின் 33 வது மனிதப் புதைகுழியைக் கண்டுபிடித்தது. இது தொடர்பான ஆராய்ச்சிகளில் மீண்டும் பேராசிரியர் ராஜ் சோம்தேவ மிகவும் கவனமாக ஈடுபட்டதுடன் ஆராய்ச்சிகளின் இறுதியில் கிழிந்த பச்சை நிற துணிகளை கொண்டிருந்த அந்த மனித எச்சங்கள் 1994 மற்றும் 1996 கால இடைவெளியில் புதைக்கப்பட்ட இலங்கையின் தமிழின போராட்டக் குழுவான விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சார்ந்தவர்களுடையது என ஆய்வு முடிவை முன்வைத்தார். ஆனால் வழக்கம் போல இந்த ஆய்வு இலங்கை அரசிடம் காணப்பட்ட நிதிப் பற்றாக்குறை காரணமாக கிடப்பில் போடப்பட்டதோடு இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளின் படி 1989 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் சிவில் யுத்தம் ஒன்றைக் கண்ட இலங்கை அரசு தான் ஈராக் நாட்டிற்கு அடுத்த படியாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் மிகவும் அதிகமானது என்று ஐக்கிய நாடுகளின் ஒன்றியம் அறிவித்திருந்தது. அப்போதிருந்தே இலங்கை அரசும் ஏனைய மனித உரிமைகள் அமைப்புகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை பற்றிய வித்தியாசமான விபரங்களை திரட்டி இருந்தன. ஆனால் 2017களில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் திரட்டிய தரவுகளின் பிரகாரம் சுமார் 60,000 தொடக்கம் 100,000 வரையான மக்கள் இலங்கையின் யுத்த காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1971 மற்றும் 1988 களில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமையில் இடம்பெற்ற உள்நாட்டுப் யுத்தம் மற்றும் ஆயுதமேந்திய எழுச்சிகள் ஆகிய இரண்டின் போதும் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தன. போருக்குப் பின்னரும் அவை “வெள்ளை வேன் கடத்தல்கள்” மூலம் தொடர்ந்தன. அடையாளம் தெரியாத இந்த வெள்ளை வேன்களை இயக்கும் அநாமதேய குழுக்கள், பொதுமக்களை குறிப்பாக சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களையும் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசின் கொள்கைகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை உடையவர்களை குறிவைத்து இயங்கின. இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் அநேகர் அனாமதேய கைதுகளை சட்டபூர்வமாக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் (PTA) தடுத்து வைக்கப்பட்டவர்கள். 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இச் சட்டம் சிவில் யுத்தம் துவங்குவதற்கு மிக அண்மைய காலப்பகுதியில் அதாவது 1982இல் நிரந்தரமான சட்டமாக ஆக்கப்பட்டது.
மனித புதைகுழிகள் என்ற ஒன்றைப் பற்றி இலங்கை அரசும் அரச அதிகாரிகளும் பேச விரும்பாத போதும் சட்டபூர்வமற்ற கொலைகள் குறித்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த பிரக்ஞையை தொடர்ந்தும் தக்க வைப்பதில் மிகுந்த முக்கியத்துவம் உள்ள பங்களிப்புக்களை அவை வழங்கி வருகின்றன. மட்டுமன்றி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் அது பற்றிய நலன் காக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இலங்கை அரசின் யுத்த கால மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களுக்கும் பொறுப்புக்கூறல் பற்றி இலங்கை அரசுக்கு ஞாபகமூட்டி அதற்கு வலுச்சேர்க்கும் பணியையும் அவை வழங்குகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு பல்வேறு வகைகளில் நம்பிக்கை தரும் விடயமாகவும் இதனை கருத முடியும்.
இலங்கையின் முதலாவது மனிதப் புதைகுழிகள் 1994 இல் மனித உரிமைகள் ஆர்வலர்களினதும் அரசியல் அமைப்புக்களை சார்ந்தவர்களினதும் தூண்டுதல்களால் தென் மாகாணத்தைச் சேர்ந்த சூரிய கந்த எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த எம்பிலிப்பிட்டிய பிரதேச பாடசாலையின் சுமார் 25 பாடசாலை மாணவர்களுடைய எச்சங்கள் பேனைகளுடனும் கிழிந்த நிலையில் இருந்த நீல நிற காற்சட்டைகளுடனும் சாரம்களுடனும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இலங்கை அரசு பற்றிய மாற்று அபிப்பிராயங்களை கொண்டிருந்ததன் மூலமாகவும் பொதுச் சொத்துக்களை அழித்ததன் ஊடாகவும் பாடசாலையில் குறித்த மாணவர்கள் தேச விரோத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக கூறி இராணுவம் அவர்களை விசாரணை செய்தது. இதன் பின்னர் குறித்த பாடசாலை மாணவர்கள் 1989 மற்றும் 1990 காலப்பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
1990 இல் இது பற்றிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நாட்டின் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் இது ஒரு மிகமுக்கியமான தருணமாக மாறும் என்று ஆர்வலர்கள் நம்பினர். இருப்பினும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பாடசாலை அதிபர் மற்றும் ஏழு இராணுவ அதிகாரிகள், கொலை மற்றும் கடத்தல் நோக்கங்களுக்காக குற்றவாளிகளாகக் கருதப்பட்டு 05 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இதற்கிடையில், போலீஸ் விசாரணையில் கிடைக்கப்பெற்ற எலும்புகள் பள்ளி மாணவர்களுடையதா என முடிவு செய்யப்படாததால், பெற்றோருக்கு அவர்களது எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
1994ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் இவ்வாறு எதேச்சையாகவும் சந்தேகத்திற்கு இடமான முறையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலமாகவும் அநேகமாக மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட 33 மனிதப் புதை குழிகளில் 06 புதைகுழிகள் 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி காலப்பகுதியைச் சார்ந்தவை (8000 மக்கள் இந்த அனர்த்தத்தினால் காணாமல் போயினர்). ஏனைய அனைத்து புதை குழிகளும் JVP மற்றும் சிவில் யுத்த வன்முறைக் காலங்களைச் சேர்ந்தவை எனவும் நம்பப்படுகிறது. இவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நம்பிக்கை ஒன்றை அளித்தாலும் அரச அதிகாரிகள் அந்த நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். தோண்டியெடுக்கப்பட்ட எச்சங்கள் எங்கு உள்ளன என்பது பற்றி எந்தத் தகவலும் இதுவரையில் தெரியவில்லை; எந்த குடும்பமும் அவற்றை பெற்றதும் இல்லை. விசாரணைகள் நடைபெறுவதால், நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வேறு வழக்குகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள், நீதிமன்ற உத்தரவுகள் தாமதமாகின்றன, குடும்பங்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கல்லறைகள் உள்ள இடங்களுக்குச் செல்வது மறுக்கப்படுகிறது. இவை எல்லாம் அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து வருவதற்கு காரணமாகின்றன. சமீபத்திய செய்திகள் பல அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் விசாரணையகளைத் தடுக்கும் முனைப்புடன் புதைகுழிகள் பற்றிய பொலிஸ் பதிவுகளை அழிக்க உத்தரவிட்டதன் மூலம் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தமை குறித்தும் தெரிவிக்கின்றன.
ஊழல், அரசியல் விருப்பமின்மை, பலவீனமான சட்ட மற்றும் விஞ்ஞான கட்டமைப்பு, பொருத்தமற்ற கொள்கை மற்றும் போதிய வளங்களின் பற்றாக்குறை ஆகியன இலங்கையில் பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடை செய்துள்ளன. அந்த மனிதப் புதை குழிகள் மறக்கடிக்கச் செய்யப்படுவதோடு குறித்த நிலங்கள் அரசாங்க அபிவிருத்தி வேலைத்திட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கும் உள்வாங்கப்படுகின்றன. மனிதப் புதைகுழிகள் பற்றிய பல அறிக்கைகள், ஆய்வுகள் மற்றும் நடாத்தி, முடிக்கப்பட்டு, ஒரு மூலையில் தூசி படியும் படியாக கிடப்பில் போடப்பட்டுள்ளது, உறுதியான முடிவு எதுவும் இதுவரையில் இல்லை. இந்த அவலங்களின் பின்னணியில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் வீடு திரும்புவதைக் காணாமல், விடையின்றி வாழ்ந்து மடிகின்றனர்.
உள்ளூரில் வசிக்கும் 49 வயதுடைய மரியசுரேஷ் ஈஸ்வரி, தனது கணவர் மியதாஸைத் தேடுவதற்காக முல்லைத்தீவு மனிதப் புதைகுழிக்கு தவறாமல் சென்று வருவார். மியதாஸ் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஒரு சாதாரண மீனவர்.
“எனக்கு இதுவரையில் அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை; யாரும் எதையும் பற்றி ஒன்றும் கூறுவதுமில்லை” என்று தெரிவிக்கிறார் மரியசுரேஷ் ஈஸ்வரி.
இதேபோல், 63 வயதான ஜெனிபர் ஜமால்டீன் வீரசிங்க, இலங்கை கடற்படையால் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரான தனது மகன் திலானைப் பற்றிய தகவல்களைத் தேடி கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்குகிறார். Navy 11 என பிரபலமாக அறியப்படும் இந்த வழக்கில் சிரேஷ்ட கடற்படை கட்டளை அதிகாரி உட்பட 14 கடற்படை அதிகாரிகள் 2018 இல் குற்றம் சாட்டப்பட்டதோடு 2021 இல் குறித்த வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தமும் செய்யப்பட்டது. ஆனால் வேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர்கள் பற்றிய தகவல்களில் எந்த முன்னேற்றமும் இல்லை.
“எனது மகன் உயிருடன் இருப்பதை நான் அறிவேன்,” என வீரசிங்க எம்மிடம் தெரிவித்தார். “அவர்கள் எனது மகனை என்னிடம் திருப்பித் தராததன் காரணம் எனக்குத் தெரியும். அவர்கள் அவரை என்னிடம் திருப்பித் தந்தால், அவர்கள் கடத்திய அனைத்து மகன்களையும் மகள்களையும் திருப்பித் தர வேண்டி இருக்கும்; அவர்கள் இந்த கடத்தல்கள் எல்லாவற்றுக்கும் பொறுப்புக் கூற வேண்டி வரும்; இந்தக் குற்றங்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு பதில் சொல்லியாக வேண்டும்.” இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் போராளிகள் இந்த வழக்கைப் பற்றிய கேள்விகளுக்குப் பொதுவில் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இது யுத்த போராளிகளுக்கு எதிரான தாக்குதல் என்று அவர்கள் அடிக்கடி விளக்குகிறார்கள். பல சந்தர்ப்பங்களில், அரசின் மூத்த அரசியல்வாதிகள் காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் வெவ்வேறு பெயர்களில் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தனது கணவர் நியூட்டனையும், மகன் ஜானகவையும் தேடிக் கொண்டிருந்த ஜெயந்தி அமரசிங்க இப்போது நம்பிக்கை இழக்கத் துவங்கியுள்ளார். “நான் இப்போது மிக நீண்ட காலம் வாழ்ந்து விட்டதாக உணர்கிறேன் என்று எம்மிடம் தெரிவித்தார். என் கணவரும் மகனும் இதுவரையில் திரும்பி வரவில்லை”. தலைநகரான கொழும்புக்கு அருகிலுள்ள மிரிஹானாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து கறுப்பு உடை அணிந்து துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை ஏந்திய ஒரு குழுவினரால் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது ஜெயந்திக்கு வயது 32. கடத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அருகிலுள்ள மயானத்தில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை ஜெயந்தி அறிந்தார். கிரவுண்ட்ஸ்கீப்பரின் விளக்கம் அவரது கணவர் மற்றும் மகனின் விளக்கத்துடன் பொருந்தியது, ஆனால் எச்சங்கள் அவர்களுடையதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மயான பராமரிப்பாளரது விளக்கம் அவரது கணவர் மற்றும் மகனின் அங்க அடையாளங்களோடு பொருந்திச் சென்றாலும் குறித்த எச்சங்கள் அவர்களுடையதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
“அங்கே கொல்லப்பட்டவர்களின் உடல் துண்டுகள் ஆங்காங்கே சிதறிய நிலையில் இருந்தன; சில பகுதிகள் எரிக்கப்பட்ட நிலையில் சாம்பலாகவும் கிடைத்தன; உடல்களின் எந்த பகுதியும் எஞ்சி இருக்கவில்லை” என ஜெயந்தி தெரிவித்தார். சிதறிக் கிடந்த உடல் துண்டுகளில் சிலவற்றை அவர் அவரது வீட்டிற்கும் கொண்டு வந்திருந்தார். இது பற்றி மேலும் தெரிவித்த அவர் ” நான் அவற்றை என் ஆடையினுள் சுற்றிக் கொண்டேன், வீட்டிற்கு வரும் வழி முழுவதும் அழுதவாறே வந்தேன். நான் அவர்களை எனது வீட்டு முற்றத்தில் புதைத்ததாக எனக்கு நினைவிருக்கிறது” என்று தெரிவித்தார்.
“இது கடந்த காலத்தை தோண்டி எடுப்பது என்பதை விடவும் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களை மூடி மறைக்க எத்தனிக்கும் முயற்சி பற்றியது” என்று எம்பிலிப்பிட்டிய உயர்தரப் பாடசாலையில் காணாமல் போன சிறுவர்களில் ஒருவரான சுஜீவவின் தாயார் 72 வயதான பத்மினி ஹந்துவல தெரிவித்தார். “என் மனதில் என் மகனைப் பற்றிய சிந்தனை இல்லாமல் ஒரு நாளும் இருந்ததில்லை. இது எனக்கு மட்டுமல்ல குழந்தைகளை இழந்த அனைத்து பெற்றோர்களுக்கும் உரிய அனுபவம். இதில் சிலர் மற்றவர்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்” என மேலும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக பல பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குடும்ப உறவுகளின் ஆதரவுகளுடனும் சில அரசியல்வாதிகள் மற்றும் பிற மனித உரிமை அமைப்புகளின் ஆதரவுகளுடனும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இது பற்றி பரப்புரை செய்து, இந்தக் குடும்பங்களின் கதைகளை பரந்த பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் பற்றிய பிரச்சினையை அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் தங்களுடைய சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல் காலப்பகுதியில் ஆதாயத்தைப் பெறுவதற்கு இந்தப் பிரச்சினையைப் அவர்கள் மூலதனமாகப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பரப்புரை செய்வது வாக்குகளில் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. 1994 இல், சூரிய கந்த பகுதியில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, காணாமல் போன சிறுவர்களுக்கு நீதி கோரி அரசியல் பிரச்சாரத்தை நடத்தியது. விளைவாக அந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரிய அளவில் அந்தக் கட்சி வெற்றியும் பெற்றது.
இது பற்றிய மற்றொரு உதாரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “தாய்மார்களின் முன்னணி (Mothers front)” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, 1980 களில் ஜே.வி.பி ஆயுதக் கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஒன்று திரட்டினார். இளம் தலைமுறையின் புதியநாடாளுமன்ற உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் இருந்த ராசபக்சவுக்கு இந்த அணி திரட்டல் செயற்பாடு, தென்னிலங்கையில் அவரது வாக்கு வங்கியை கட்டியெழுப்பவும் அவரது அரசியல் வாழ்க்கையை முன்னேற்றவும் பெரிதும் உதவியது.
இவ்வாறு அரசியல்வாதிகள் வாக்குகளை ஈர்ப்பதற்காக உண்மையையும் நீதியையும் உறுதியளிக்கும் அதே வேளையில், அவர்களில் பலர் மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை மூடிமறைத்துள்ளனர். 1989 ஆம் ஆண்டு ஜே.வி.பி ஆயுதக் கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் இராணுவ அதிகாரியாக இருந்த போது மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுத்ததாக ராஜபக்சவின் சொந்த சகோதரர் கோத்தபய குற்றம் சாட்டப்பட்டிருந்தார். பின்னாளில் 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது கோத்தபாய பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். இக்காலத்தில் 2013 இல் இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியை உடைய அனைத்து காவல்துறை பதிவுகளையும் அழிக்க உத்தரவிட்டார். 150 மனித எச்சங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த காவல் துறை பதிவுகள் அழிக்கப்பட்டன. குறித்த மனிதப் புதைகுழிகள் இருந்த இடத்தில் இப்போது ஒரு அரச வைத்தியசாலை நிறுவப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, நாட்டில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்காக அரசாங்கங்கள் குறைந்தது 10 ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களை நிறுவிய போதும், எவரும் நம்பகமான பதில்களை வழங்கவில்லை அல்லது அவர்களின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கான அவர்களது முயற்சியில் கூட, குறிப்பிட்ட ஆணைக்குழுக்களின் செயற்பரப்பு குறிப்பிட்ட காலங்களுக்குள் அல்லது இலங்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. உதாரணத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகளில் ஈடுபட்ட B.G. டி சில்வா என்றழைக்கப்படும் ஆணைக்குழு 1991 ஜனவரி மாதத்தின் பிறகு இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி மாத்திரம் விசாரணை செய்வதாகவே வரையறை செய்யப்பட்டு இருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்ச கட்டத்தை அடைந்திருந்த ஆண்டான 1989ம் ஆண்டு இந்த ஆணைக்குழுவின் விசாரணைப் புலத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இது தொடர்பான மற்றுமொரு உதாரணம், 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை மீளாய்வு செய்வதற்கென மட்டுப்படுத்தப்பட்டு இருந்து. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இந்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2013 இல், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1990 மற்றும் 2009 க்கு இடையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்று விசாரணை செய்யும் பணியை மேற்கொண்டது. இது 21,000 புகார்களை பதிவு செய்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் கதி குறித்து அறிக்கை எந்த பதிலும் அளிக்காமல் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.
2016 ஆம் ஆண்டில், காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை (OMP) நிறுவுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியதுடன், நாடு முழுவதும் மற்றும் அனைத்து இனக்குழுக்கள் மத்தியிலும் காணாமல் போனவர்களை ஆராய்வதை நோக்கமாக கொண்டு செயற்பட்டது. 2022 ஆம் ஆண்டில், OMP 1971 முதல் 2010 வரை காணாமல் போனவர்களின் பட்டியலை வெளியிட்டபோது, இந்த விடயத்தில் அரசு தீவிரமாக தலையீடு செய்தது. குறித்த ஆய்வில் ஈடுபட்ட மிராக் ரஹீம் எனும் ஆய்வாளரும் முன்னாள் ஆணையாளரும் குறித்த அறிக்கை இன்னும் முழுமையடைவில்லை என எமக்கு தெரிவித்தார். “பதினேழாயிரம் என்பது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும், குறிப்பாக பரணகம ஆணைக்குழு போன்ற முந்தைய ஆணைக்குழுக்கள் அதைவிட அதிகமாகத் தொகுத்துள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அமைப்பு குறித்த அலுவலகத்தின் அறிக்கை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு மத்தியில் நம்பிக்கையீனத்தை குறித்த அறிக்கை ஏற்படுத்தி இருப்பதாக விசனம் தெரிவித்தது.
“நாங்கள் OMP க்கு செல்ல விரும்பவில்லை. இப்போது அங்கு செல்வதால் எந்தப் பயனும் இல்லை’’ என்று கவலை வெளியிட்டார் ஈஸ்வரி. “OMP வருவதற்கு முன்பு ஏனைய ஆணைக்குழுக்கள் இருந்தன. அவர்களும் எங்களுக்கு உதவவில்லை; OMP உம் அப்படித்தான்; அவர்கள் வந்து எங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார்கள்; எங்களுக்கு என்ன வேண்டும், உங்கள் வீட்டைக் கட்ட வேண்டுமா, உங்களுக்கு பணம் தேவையா போன்ற பலவிதமான கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் என் கணவருக்கு என்ன நடந்தது என்று அவர்கள் என்னிடம் கேட்கவில்லை. OMP போன்ற ஆணைக்குழுக்களில் நம்பிக்கை வைக்க எங்களுக்கு அவற்றில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
2019 தேர்தலில் கோட்டாபய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போனோர் தொடர்பான பல விசாரணைகள் முடக்கப்பட்டன. OMP இன் செயற்பாடு பற்றி செயற்பரப்பு மற்றும் அதன் சட்ட அங்கீகாரம் என்பனவற்றில் மாற்றங்கள் இடம்பெறாத போதும் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தேசியளவில் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் குறித்த அலுவலகம் மேற்கொள்ளவில்லை. மாறாக, 2020 இல் கோட்டபாய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக எந்தவிதமான பொறுப்புக் கூறலும் இன்றி அறிவிப்புச் செய்தார். “2019 ஆம் ஆண்டு அரசியல் சூழல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான எந்தவிதமான சட்டபூர்வ விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மிகவும் சிரமமான காலப்பகுதியாக இருந்தது” என சுட்டிக்காட்டினார் முன்னாள் ஆணையாளர் ரஹீம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் கூட இலங்கையில் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூருவதற்கு கல்லறைகள் கூட எதுவும் இலங்கையில் இல்லை. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிற சமூக ஆர்வலர்களால் நிறுவப்பட்ட சிறிய நினைவுச் சின்னங்கள் தான் உள்ளன. உதாரணமாக, 1980 களின் பிற்பகுதியில் மார்க்சிஸ்ட் புரட்சியின் போது காணாமல் போன 200 பேருக்காக அர்ப்பணிக்கப்பட்ட, ரத்தொலுகம நகரில் உள்ள சீதுவ கிராமத்தில், சில ஆர்வலர் குழுக்களின் ஆதரவுடன், காணாமல் போனவர்களின் நினைவுச் சின்னத்தை பல்துறை கலைஞர் சந்திரகுப்த தேனுவர வடிவமைத்தார். மனித உருவம் இன்றிய பாரிய சிமென்ட் தூணினால் உருவாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் பின்னணியில் ஓடுகள் வேயப்பட்ட சுவரில் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், குடும்பங்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்கள் வைத்து, அந்தந்த மத அனுஷ்டானங்களை நடத்துகிறார்கள். அதேபோன்று, எம்பிலிப்பிட்டிய பிரதேச காணாமல் ஆக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்கள் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் கொழும்பில் “Shrine of Innocents” என்ற நினைவுச் சின்னத்தை நிர்மாணித்தனர். 2012 ஆம் ஆண்டு ராஜபக்சேவின் அரசாங்கம் பொதுப் பூங்காவை அமைப்பதற்காக அதனை இடிக்கும் வரை மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் விளக்குகளை ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்தனர்.
சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தெற்கில், வீடு திரும்பாத மகன்களுக்காக தாய்மார்களின் புலம்பல்கள் பற்றி பாடல்கள் எழுதப்பட்டன. “யாடமின் பந்தா” என்ற சிங்களப் பாடலில், இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது மகனை தன்னிடமிருந்து பறித்த அதிகாரிகளுக்கு எதிராக ஒரு தாயின் சாபத்தைப் பற்றி பாடுகிறார். திரைப்படங்களும் இந்த வலியையும் வேதனையையும் ஆவணப்படுத்தியுள்ளன. உதாரணமாக, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் விசகேச சந்திரசேகரத்தின் 2018 நீதிமன்ற அறை நாடகம் “பங்ஷு” (“பூமி”) ஜே.வி.பி ஆயுதக் கிளர்ச்சியின் போது துணை இராணுவப் படைகளால் கடத்தப்பட்ட தனது மகனைத் தேடும் ஒரு தாயின் தேடலைப் பற்றியது. இன்றுவரை, காணாமல் போனவர்கள் பற்றிய தேடல்கள் நாட்டில் உள்ள பல கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பணியை உள்ளடக்கமாக இருக்கிறது. அவர்களில் பலர் நீதிக்காக தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குடும்பங்களின் கூட்டு முயற்சிகளை ஆதரித்து வருகின்றனர்.
இதற்கு மாறாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் காணாமல் போனவர்களை நினைவு கூறும் நினைவுச் சின்னங்களோ, பலகைகளோ இல்லை. குடும்பங்கள் சாலையோர கூடாரங்கள் மற்றும் குடிசைகளில் நினைவுச்சின்னங்களை வைத்திருக்கும் அதே வேளையில், அவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் மிருகத்தனமான எதிர்ப்பையும் ஒடுக்குமுறைகளையும் சந்தித்து வருகின்றன.
காணாமல் போனவர்கள் வெறும் நினைவாக மாறிவிடுவார்கள் என்று பலர் அஞ்சுகிறார்கள், என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை தெரியாமலும் மற்றும் நீதிக்கான நம்பிக்கையுடனும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவில் வைத்திருக்கும் அன்பான உறவுகள் காலத்தால் இழக்கப்படுகிறார்கள்.
கிறிஸ் தோமஸ் கொழும்பை மைய்யமாக வைத்து செயற்படும் பத்திரிகையாளர். Roar LK இணையதளத்தின் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்