– மனாசிர் ஸரூக்
நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் 2/3 பெரும்பான்மைக்கும் அதிகமான பாராளுமன்ற ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி(NPP) பெற்றுள்ளது. 225 பாராளுமன்ற ஆசனங்களில் 159 ஆசனங்கள் தே.ம.ச. வசமானது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றத்தில் ஒரு கட்சி பெறும் அதிகூடிய ஆசனங்கள் இது. இதுவரையிலான பாராளுமன்றத் தேர்தல்களில் மையநீரோட்ட பிரதான அரசியல் கட்சிகளின் கூட்டணிகளே 2/3 பெரும்பான்மையை நெருங்க முடிந்தன. செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மைக்கும் குறைவான 42.31% வாக்குகளையே பெற்ற தே.ம.ச. அணி, நவம்பர் மாத பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 2/3 பெரும்பான்மைக்கு அதிகமான ஆசனங்களை (61.56%) பெற்றுள்ளது. இவ்வகையில், 2022 ஆம் ஆண்டின் மக்கள் போராட்டமான அரகலயவிற்குப் பின்னரான அரசியல் கள மாற்றங்களை உரையாடல் நோக்கில் முன்வைக்க முயல்கிறது இக்கட்டுரை.
விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை
1977 ஆம் ஆண்டு ‘எளிய பெரும்பான்மை தேர்தல் முறை’யின் கீழ் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி(UNP) 5/6 பெரும்பான்மையினைப் பெற்றது. எளிய பெரும்பான்மை தேர்தல் முறை பெரிதும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு(SLFP) அதன் வாக்கு வங்கியின் தன்மை காரணமாக சாதகமான பல அம்சங்களை கொண்டிருந்தன. தனக்குக் கிடைத்த பெரும்பான்மை பலத்தினை பயன்படுத்தி புதிய அரசியலமைப்பினையும், தமக்கு சாதகமான விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையினையும் ஜே.ஆர். ஜயவர்த்தன கொண்டு வந்தார். சிதறிய நிலையிலும், நகரங்களை மையப்படுத்தியும் ஐ.தே.க.க்கு காணப்பட்ட வாக்குகளினை இம்முறை மூலம் திரட்ட முடிந்தன. இத்தேர்தல் முறையின் இன்னொரு சாதகம் தான் சிறிய மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கான அரசியல் இருப்பினை சாத்தியப்படுத்தியது. அதிக சனப்பரம்பல் கொண்ட வட-கிழக்குக்கு வெளியில் சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கான வெளி எளிய பெரும்பான்மை தேர்தல் முறையில் சாத்தியப்படவில்லை. அதே போன்று இரு கட்சி முறையினை இத்தேர்தல் முறை ஊக்குவித்ததுடன், மையநீரோட்ட பிரதான அரசியல் கட்சிகள் தவிர சிறிய அரசியல் கட்சிகள் எளிய பெரும்பான்மை தேர்தல் முறையில் வெற்றி பெறுவது கடினமானது. ஜே.வி.பி. போன்ற சிறிய கட்சிகளுக்கான அரசியல் வெளி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் பின்னரே சாத்தியமானது.
விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையினை ஜே.ஆர். ஜயவர்த்தன கொண்டு வந்ததன் பின்னனியில் இன்னொரு காரணமும் காணப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர் எந்தவொரு கட்சியும் 2/3 பெரும்பான்மை பலத்தினை பாராளுமன்றில் தனித்து பெற்றுவிடக் கூடாது என்பது. 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பிற்குப் பின்னர் அரசியலமைப்பு மாற்றத்துக்கான பலத்தினை பிரதான அரசியல் கட்சிகளினால் பெறுவது கடினமான விடயமாகவே இருந்தன. இந்நிலையிலான மாற்றத்தினை 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் தே.ம.ச.க்கு வழங்கியிருக்கின்றது.
விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் மிக முக்கிய பலவீனமாக கட்சிகளின் கொள்கையினை பின்தள்ளி தனிநபர்களின் ஆதிக்கத்துக்கு அரசியல் போக்கினை இட்டுச் சென்றமை கொள்ளப்படுகின்றது. இத்தேர்தல் முறையின் கீழ் 1985ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட ‘விருப்பு வாக்கு முறை’ தனிநபர்களின் ஆதரவில் கட்சி செயலாற்ற வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றது. கட்சித் தாவலை ஒரு அரசியல் கலாச்சாரமாகவும், வியாபாரமாகவும் மாற்றியது. எளிய பெரும்பான்மை தேர்தல் முறையின் கீழ் சரியோ, தவறோ கட்சிகள் தமது கொள்கைகளினையும், நிகழ்ச்சித் திட்டங்களினையும் முன்னிறுத்தியே தேர்தல்களை எதிர்கொண்டன. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் வேட்பாளர்களிடையே உட்கட்சி போட்டி ஊக்குவிக்கப்பட்டதுடன், எதிர்மறை சமூகக் காரணிகள் தேர்தல் வெற்றியினை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றின. தற்போதைய அரசாங்கத்தினை பொறுப்பேற்றுள்ள தே.ம.ச.(அதாவது, ஜே.வி.பி) உட்கட்சி போட்டியினை கட்டுப்படுத்தியதில் ஒப்பீட்டு ரீதியில் வெற்றி பெற்ற, கொள்கை அரசியலினை முன்னெடுத்த கட்சி என்று பொதுவில் கருதப்படுகின்றது. இதுவும் இத்தேர்தலில் தே.ம.ச.யினை கவர்ச்சிகரமான தெரிவாக மாற்றியதில் பெரும்பங்காற்றின. தற்போது முதல் முறை பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ள மிகப்பெருந்தொகையான உறுப்பினர்களை பொருத்தளவில் அவர்களின் அடையாளம் தே.ம.ச.யினை தவிர்த்து நோக்கினால் எதுவும் அற்றவை. எனவே, கட்சித் தாவல் என்பது இப்பாராளுமன்றத்தில் மிகமிக அரிதாகவே இடம்பெற முடியும்.
நிலையான வாக்கு வங்கியும், மிதக்கும் வாக்குகளும்
அரசியல் கட்சிகளின் இருப்பினை உத்தரவாதப்படுத்தும் அம்சமாக கட்சிகளுக்கான நிலையான வாக்கு வங்கிகள் காணப்படுகின்றன. நிலையான வாக்கு வங்கிக்கு மேலதிகமாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் மிதக்கும் வாக்குகளை கவர முயற்சி செய்யும். பொதுவில் ஒரு நாட்டின் வாக்கு வங்கியில் சுமார் 60 – 70 சதவீதம் அரசியல் கட்சிகளின் நிலையான வாக்கு வங்கியாகவும், மிகுதி அப்போதைய சூழ்நிலையில் அடிக்கும் அலையின் போக்கிற்கு ஏற்ப சாயும் மிதக்கும் வாக்குகளாகவும் காணப்படும். நிலையான வாக்கு வங்கிக்கு மேலதிகமாக ஒரு அரசியல் கட்சி பெறும் வாக்குகள் பெரும்பாலும் ஆட்சிக்கு வருகின்ற அரசியல் கட்சியினை தீர்மானிக்கும். இதுவே பல நாடுகளின் அரசியல் போக்கு.
2015 ஆம் ஆண்டின் மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிற்பாடு இப்போக்கிலான சரிவினை காட்டத் தொடங்கின. முன்னைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரி தலைமையிலான SLFP அணியாகவும், மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான SLPP அணியாகவும் பிளவுபட்டன. இது SLFPயின் வாக்கு வங்கியின் பெருந்தொகையினை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய SLPP கட்சி கவர்ந்து செல்வதற்கு இட்டுச் சென்றது. இது இதுவரையில் நீண்டகாலம் நிலையாக இருந்து வந்த SLFP என்ற கட்சிப் பிம்பத்தின் நிலையான வாக்கு வங்கியிலான தளம்பலினையும், உடைவினையும் இலங்கை கட்சி அரசியல் வரலாற்றில் முதல் முறை வெளிக்காட்டியது. ரணில் தலைமையிலான ஐ.தே.க.யின் பலவீன நிலை 2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய SJB அரசியல் கட்சியின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. ஐ.தே.க.யின் நிலையான வாக்கு வங்கியின் பெருந்தொகையினை சஜித் தலைமையிலான புதிய கட்சி கவர்ந்து கொண்டது. இதுவும் இதுவரையில் நீண்டகாலம் நிலையாக இருந்து வந்த ஐ.தே.க.(UNP) என்ற கட்சிப் பிம்பத்தின் நிலையான வாக்கு வங்கியிலான தளம்பலினையும், உடைவினையும் இலங்கை கட்சி அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறை வெளிக்காட்டியது.
SLFP மற்றும் UNP ஆகிய இரு பிரதான தாய் கட்சிகள் தமது நிலையான வாக்கு வங்கிகளினை இழந்து பலவீனப்பட்ட நிலையிலும், இக்கட்சிகளிலிருந்து பிறப்பெடுத்த புதிய அரசியல் கட்சிகளுக்கு மக்கள் முழுமையாகப் பழக்கப்படுத்தப்படுவதற்கு முன்னரும் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்தது. விளைவாக மக்கள் போராட்டமான அரகலய வெடித்தது. அரகலய மூலம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துரத்தப்பட்டதுடன், அப்போதைய பாராளுமன்றமும் சட்டபூர்வத் தன்மையை இழந்தது. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சியின் நிலையான வாக்கு வங்கி முழுமையாக அரகலயவின் பிற்பாடு சிதைந்தது. முன்னைய அரசியல்வாதிகள் மீதான மக்களின் கோபம் வழமையான எதிர்க்கட்சி மீதான சாய்விலும் சரிவினை ஏற்படுத்தின.
ஏற்கனவே பிரதான அரசியல் கட்சிகளின் உடைவினால் தளம்பலில் இருந்த பிரதான அரசியல் கட்சிகளின் நிலையான வாக்கு வங்கி, அரகலயவின் பிற்பாடு பாரிய வீழ்ச்சியினை சந்தித்தன. அரகலயவிற்கு பிற்பட்ட அரசியல் கள நிலபரமானது கட்சிகளின் வாக்கு வங்கிகளினை விட மிகப்பாரிய தொகை வாக்குகளினை மிதக்கும் வாக்குகளாகவே மாற்றின. பாரிய தொகையான மிதக்கும் வாக்குகளில் பெருந்தொகை தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் கவர்ச்சிகரமான பேச்சினால் கவர்ந்து கொள்ளப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதற்குப் பின்னர் எந்த அரசாங்கங்களுடனும் நீண்ட காலம் கூட்டணி வைக்காத ஜே.வி.பி.யானது (தற்போதைய தே.ம.ச.) நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடியின் பங்குதாரராக கருதப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளிலிருந்து தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள முடிந்தது. இது தே.ம.ச.க்கு இருந்த மிகப் பெரும் சாதக நிலையாகும்.
மேலும், நீண்ட காலம் ஊழல், மோசடிகள் குறித்து ஜே.வி.பி. பேசி வந்துள்ளது. மில்லியன்கள், பில்லியன்கள் என்று ஜே.வி.பி. பிரச்சாரம் செய்து வந்தது தங்களை எப்படி பாதிக்கும் என்று மக்கள் உணர்ந்திருக்கவில்லை. யதார்த்தத்தில், மக்களின் பெரும்பாலானோருக்கு ஆயிரங்களில் மில்லியன், பில்லியன் எனும் போது அதன் பூச்சியங்களை கணிப்பிடுவதே கடினமாக இருந்தன. பாரிய பொருளாதார நெருக்கடியின் பிற்பாடு அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகள் குறித்த அதீத விழிப்புணர்வு ஜே.வி.பி.யின் பிரச்சாரத்துடன் இலகுவில் ஒன்றித்தது. தே.ம.ச.யின் அரசியல் பிரச்சாரத்தின் மையப் பொருளாக ஊழலற்ற, மோசடிகளற்ற அரசாங்கமே இருந்தது.
அரகலயவிற்கு பிற்பாடு இரண்டு வருடங்கள் நாட்டினை பொறுப்பெடுத்து நடாத்திய ரணில் விக்ரமசிங்க தன்னை ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்தான மீட்பராகவே முன்னிறுத்திக் கொண்டார். ரணிலின் மீட்பர் பிம்பம் ஓரளவு இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு கைகொடுத்தது. ஆனால், ரணில் விக்ரமசிங்க சிறீலங்கா பொதுஜன பெரமுன(SLPP)வின் அப்போதைய பாராளுமன்றப் பெரும்பான்மையில் நின்று தனக்கு அதிகாரத்தை பெற்றுக் கொண்டதும், பொருளாதார நெருக்கடிக்கு நேரடிக் காரணமாகக் கருதப்பட்ட ராஜபக்ஷாக்களை காத்து நின்றதும், அரகலயவின் நோக்கத்தினை களவாடியதும் அவர் மீதான பாரிய அதிருப்திக்கு வழிவகுத்தது. ரணிலின் மீட்பர் பிம்பம் ஜனாதிபதி தேர்தலுடன் முடிவுக்கு வந்ததுடன், ஒருங்கிணைந்து புதிய கூட்டணியாக பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னெடுப்பையும் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்தது. பொருளாதார நெருக்கடிக்கான பலியினை சஜித் பிரமேதாசவும் சேர்ந்து சுமந்து கொள்ளும் அபாயத்தினை ரணிலுடனான கூட்டணி ஏற்படுத்தியிருக்கும். இது சஜித்தின் அரசியல் எதிர்காலத்துக்கான பாரிய சவால். எனவே, வலுவான போட்டிகளற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலாகவே இத்தேர்தல் அமைந்தது.
தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ஆதிக்கம் என்பது அரசியல் உயர்குழாத்தினர்களின் (Political Elite) கைகளிலேயே இருந்தன. இலங்கை அரசியலின் போக்கினை தீர்மானிக்கும் சக்திகளாகவும் இவர்களே காணப்பட்டனர். மையநீரோட்ட அரசியல் கட்சிகளின் உயர் பதவிகளிலும் இவர்களே இருந்தனர். எனவே, மாறி வந்த அரசாங்கங்கள் அனைத்திலும் உயர் பதவிகளை இவர்களே வகித்தனர். அரசியல் உயர்குழாத்தினர்களிடம் இருந்த அதிகாரம் தற்போது மத்தியதர வர்க்கத்துக்கு கைமாறியுள்ளது. இது இலங்கை அரசியல் போக்கில் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றங்களில் ஒன்று. (மத்தியதர வர்க்கம் ஆட்சி அதிகாரத்தினை பெறுதல் சிறந்த மாற்றம் என்ற அர்த்தத்தில் இங்கு ‘மாற்றம்’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை; மாற்றம் என்பது வழமையான போக்கிலான நிலைமாற்றம் என்ற அர்த்தத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன).
அரசியல்வாதிகளின் முதன்மைப் பலம், நிலவும் சமூக அமைப்பில் மாற்றங்கள் குறித்த மக்களின் அச்ச நிலை. அனுபவமற்ற புதியவர்களிடம் அரசியல் அதிகாரத்தினை ஒப்படைத்து தங்களின் நிலவும் சமூக அமைப்பினை பதட்டத்துக்குள்ளாக்க, குழப்பிக் கொள்ள மக்களின் பொது உளவியல் இடம் கொடுப்பதில்லை. இவ் உளவியலே ஆளும் கட்சி – எதிர்க் கட்சி என்று ஒரே வகுப்பினரிடம் அதிகாரம் சுழல வழிவகுக்கின்றன. இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடி அதுவரையிலான வாழ்க்கை மீதான நம்பிக்கையினை சிதைத்தது. நிச்சயமற்ற தன்மையே வாழ்க்கையாகிப் போனது. இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிச்சயமற்ற நிலமையில் மக்கள் தங்களை ஆட்சி செய்த முன்னைய அரசியல்வாதிகள் மீது கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடாக இந்நிலைமாற்றம் ஏற்பட்டது. மற்றும் முன்னைய அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கையும், அரசின் மூலம் அனுபவிக்கும் சலுகைகளுமே நாட்டினை பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றன என்ற மனநிலையும் அவர்களை தேர்தலில் புறக்கணிக்க காரணமாயமைந்தன.
இனப் பிரச்சினை தீர்விற்கான சாத்தியங்கள்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனையாக அரகலய அமையப் போகின்றன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவரை அது பதவியில் இருந்து தூக்கியெறிந்துள்ளன. நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்களில் மீதமிருந்த அதன் எச்சசொச்சங்களையும் புறக்கணித்துள்ளன. இலங்கை அரசியலினை பொருத்தளவில் இது முக்கியமானதொரு மாற்றம். ஆனால், இலங்கையின் பெருந்தேசியவாத அல்லது இனவாத நோக்கில் ஏற்பட்ட மாற்றமல்ல இது. அரகலயவின் ஊக்க சக்தியாக தொழிற்பட்டது பொருளாதார நெருக்கடியே. கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார முகாமையிலான தோல்வியே அரகலயவிற்கான நேரடிக் காரணம். அரகலயவிற்கான அணிதிரட்டலும் பொருளாதார நெருக்கடியினை முன்னிறுத்தியே நிகழ்ந்தன. தற்போதைய அரசாங்கத்துக்கான மக்கள் ஆணையும் முதன்மையாக பொருளாதார மேம்பாட்டினை இலக்காக கொண்டவையே.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது வெறுமனே ஊழல், மோசடிகளால் மட்டும் ஏற்பட்டதல்ல. ஊழல், மோசடிகள் கோட்டாபய அரசாங்கத்தில் மட்டும் நிலவியதுமல்ல. இன்று உலகின் வளர்ந்த, வளர்ந்துவரும் அனைத்து நாடுகளினதும் பொதுப் பிரச்சினை இது. பின்காலனிய இலங்கையின் அரசியல் நெருக்கடி மற்றும் அதன் விளைவான சமூக நெருக்கடி என்பவற்றின் நீட்சியும், இறுதி விளைவுமே பொருளாதார நெருக்கடி. இலங்கையின் அரசியல் நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காணாமல் வெறுமனே ஊழல் மோசடிகளை ஒழிப்பதன் மூலம் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. அதாவது, இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் விளைவாகவே மூன்று தசாப்த கால யுத்தமும், சமூக பதட்டங்களும், நம்பிக்கையீனங்களும் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, மூன்று தசாப்த கால உள்நாட்டுப்போர் காரணமாக ஏற்பட்ட நாட்டின் பாரிய கடன் தொகையும், யுத்தத்துக்குப் பிற்பாடு நாட்டின் அபிவிருத்திக்கென்று பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களும், இக்கடன்களுக்கான வட்டித் தொகையும் இணைந்தே இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியுள்ளன.
இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இயற்றி வந்த சட்டங்களும், ஏற்படுத்திய அரசியலமைப்புகளும் இனப்பாகுபாட்டினை தெளிவாகவே வெளிக்காட்டுபவை. 1948இன் பிரஜா உரிமைச் சட்டம், அதற்குப் பின்னரான தனிச்சிங்கள சட்டம் என்று பல சட்டங்களும், அரசிலமைப்பின் உள்ளடக்கங்களும் பெருந்தேசியவாத கருத்தியலையே பிரதிபலித்தன. இத்தகைய இனப்பாகுபாட்டின் விளைவாக தோற்றம் பெற்ற அரசியல் நெருக்கடி தீர்வு காணப்படாமலேயே தொடரவும் செய்தது. விளைவாக, அரசியல் நெருக்கடி சமூக மட்டத்தில் பிரதிபலிக்கத் தொடங்கி, சமூக நெருக்கடியினை தோற்றுவித்தது. 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இதன் உச்சகட்ட வெளிப்பாடாக அமைந்தது. இலங்கை மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போருக்குள் நுழைந்தது. இப்போரின் பாதிப்பின் ஒரு விளைவினையே தற்போது நாம் பாரிய பொருளாதார நெருக்கடியாக எதிர்கொண்டுள்ளோம். கோட்டபய ராஜபக்ஷயின் தவறான பொருளாதார முகாமை இதனை எமக்கு உடனடியாக வெளிக்காட்டிய தருணம் தான் 2022ஆம் ஆண்டின் நாட்டின் திவால் நிலை. இலங்கை தன்னகத்தே கொண்டுள்ள நிலம் மற்றும் கடல் சார் வளங்களினை கொண்டே தன்னிறைவினை பெறும் இயலுமை கொண்டது. உள்நாட்டுப் போரினை நடாத்தவும், அதன் பிற்பாடு அபிவிருத்தியெனவும் இலங்கை பெற்ற கடன்களை தவிர்த்துப் பார்த்தால், இலங்கை இவ்வளவு பாரிய கடன் சுமைக்கு உட்பட வேறு எந்த முகாந்திரமும் இல்லை.
தற்போது எம்முன் உள்ள கேள்வி, தே.ம.ச.யின் புதிய அரசாங்கம் நாட்டின் இனப் பிரச்சினையை பரந்த தளத்தில் அணுகி கையாளுமா அல்லது ஊழல், மோசடிகளை ஒழித்து பொருளாதார மீட்சியினை மாத்திரம் அதன் பிரதான இலக்காகக் கொண்டு திருப்தி காணுமா என்பது. தே.ம.ச.யின் முதன்மைக் கட்சியான ஜே.வி.பி.யின் கடந்த கால வரலாற்றினை நோக்கினால், ஜே.வி.பி. கடந்த காலங்களில் இனப் பிரச்சினை விடயத்தில் சிக்கலான நிலைப்பாட்டினையே கொண்டிருந்துள்ளது. ஜே.வி.பி. தன்னை இடதுசாரிக் கட்சியாக முன்னிறுத்தினாலும், இலங்கையின் அரசியலில் அது சிங்கள பெருந்தேசியவாத முகாமாகவே தன்னை நடைமுறையில் நிலைநிறுத்தி வந்துள்ளது. தீவிர தேசியவாத நிலைப்பாட்டிலிருந்தே இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டு போரினை அணுகியுள்ளது. இந்திய விஸ்தரிப்புவாத விவகாரத்தினை தமிழ் மக்களுடனும், தமிழர் போராட்டங்களுடனும் தொடர்புபடுத்தியே பிரச்சாரம் செய்துள்ளது. உள்நாட்டுப் போர் கால சமாதான முன்னெடுப்புகளிலும் நேர்மறையான நிலைப்பாட்டினை கடந்த காலங்களில் ஜே.வி.பி. வெளிக்காட்டவில்லை. இனப் பிரச்சினைக்கான சமஷ்டித் தீர்வினை பிரிவினைவாதமாகவே நோக்கியுள்ளது. ஆனால், உலகளவில் இந்தியா உட்பட பல நாடுகள் சமஷ்டி ஒழுங்கினை பின்பற்றி வெற்றிகரமாக தொழிற்படுவது யாரும் அறியாத விடயமல்ல.
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு முறையினை நோக்குகையில், இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த கணிசமான வாக்குகளை தே.ம.ச. கவர்ந்துள்ளது. பாரம்பரியமான தமது முன்னைய அரசியல் கட்சிகளையும், அதன் வேட்பாளர்களையும் சிறுபான்மை மக்கள் புறக்கணித்துள்ளனர். முன்னைய சிறுபான்மை அரசியல் கட்சிகள் முன்வைத்து அரசியல் செய்த தேசியவாதக் கருத்தியலின் தோல்வியாகவும், அதிருப்தியாகவும் இவ்வெளிப்பாடுகள் காணப்பட்டன. ஏற்கனவே இருந்த மைய நீரோட்ட அரசியல் கட்சிகளிடம் எதிர்பார்க்காத இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தினை தே.ம.ச. வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் இதன் பின்னனியில் தொழிற்பட்டது.
இங்கு தே.ம.ச.க்கு இருக்கும் சவால் சிறுபான்மை சமூகங்கள் சொந்த நாட்டில் தாங்கள் இரண்டாம்பட்ச குடிமக்களாக நடாத்தப்படும் நிலைக்கு எதிரான நியாயமான தீர்வினை தே.ம.ச.யிடம் எதிர்பார்த்து வாக்களித்தனர். அதாவது, சிறுபான்மை சமூகங்களின் பிரதானமானதும், முதன்மையானதுமான எதிர்பார்ப்பு இனப் பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வுத் திட்டம். ஆனால், பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர்களின் வாக்களிப்பின் பின்னனியிலிருந்த பிரதானமானதும், முதன்மையானதுமான மனநிலை பொருளாதார நெருக்கடியிலிருந்தான மீட்சி. இவ்விடத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை சமூகங்கள் வேறுபாடின்றி உடன்பட்ட புள்ளி தமது முன்னைய அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி. பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை தவிர்த்து இனப் பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வு, பெரும்பான்மை சிங்கள சமூகத்தை அதிருப்திக்கே இட்டுச் செல்லும். இனப் பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வின்றி வெறும் பொருளாதார மீட்சியினால் மாத்திரம் சிறுபான்மை சமூகங்கள் திருப்தியுற மாட்டாது. இனப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வுத் திட்டமின்றி, வெறுமனே ஊழல் மோசடிகளற்ற அரசாங்கத்தை அமைத்தல் மாத்திரம் பொருளாதார மீட்சியினை ஏற்படுத்தப் போவதில்லை. தே.ம.ச.(அதாவது, ஜே.வி.பி) தனது முன்னைய பெருந்தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை நோக்கி நகருமா அல்லது முன்னைய அரசியல் நிலைப்பாடுகளிலேயே தனக்கான பெரும்பான்மை சிங்கள வாக்கு வங்கியின் நிலைத்த தன்மையை அடையாளம் கண்டு பொருளாதார மீட்சியினை இலக்காகக் கொண்ட ஊழல் மோசடிகளற்ற அரசாங்கத்துடன் நின்று கொள்ளுமா என்பதே தே.ம.ச.யின் முதன்மைச் சவால். 2/3 பெரும்பான்மை பலத்தினை பாராளுமன்றத்தில் பெற்ற நிலையில், புதிய அரசியலமைப்புக்கான முன்னெடுப்பில் இச்சவால் தவிர்க்க முடியாமல் தே.ம.ச.யிடம் வெளிப்படவே செய்யும்.
தே.ம.ச.யின் தேர்தல் வெற்றியின் பின்னரான முன்னெடுப்புகள் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை சாத்தியப்படுத்தலில் நம்பிக்கையளிக்குமா
01. “இலங்கையராக சிந்தியுங்கள்… சிங்களவராக, தமிழராக, முஸ்லிமாக சிந்திக்காதீர்கள்” போன்ற கோஷங்கள் தற்போதைய அரசியல் களத்தினை ஆக்கிரமித்துள்ளன. இக்கோஷம் வெளிப்படையில் இனவாதத்தை ஒழிப்பதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் காட்சியளிக்கின்றன. ஆனால், அடிப்படையிலேயே தவறான ஒரு கோஷம் இது. ஏன் தவறாகிறது் இனவாதத்தை ஒழிப்பதென்பது இன அல்லது மத அடையாளங்களை ஒழிப்பதல்ல. மனித இனத்தின் அழகே மனிதர்களின் பன்முகப்பட்ட அடையாளங்கள் தான். குறித்ததொரு இன அல்லது மத அடையாளத்தை ‘அரசியல்மயப்படுத்தலே’ இனவாதமாக அல்லது மதவாதமாக அமைகின்றன. இவ்வாறான அரசியல்மயப்படுத்தல் மூலம் அரசதிகாரத்தினை கையகப்படுத்தும் குறித்த ஒரு இனம்(பெரும்பாலும், பெரும்பான்மை இனம்) பெறும் முன்னுரிமைகளை அரசு தனது நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியாக காக்கவும், பேணவும் செய்யும். இன்னொரு வகையில், அடையாள அழிப்பு என்பதே ஒரு பாசிச முன்னெடுப்பு. பாசிசம் தான் வரையறுக்கும் தேசிய பொது அடையாளத்தில் அனைவரும் கரைய வேண்டும் என்றே வரலாறு நெடுகிலும் கோரியுள்ளது.
புரிதலுக்காக, இன அடையாளத்தை ‘அரசியல்மயப்படுத்தலுக்கான’ ஒரு கிட்டிய எடுத்துக்காட்டு: 2018ஆம் ஆண்டு கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் நாம் அறிந்ததே. அதன் பின்னனி நிகழ்வு ஒரு சிங்கள சாரதியை சில முஸ்லிம் இளைஞர்கள் குடிபோதையில் இருந்த நிலையில் எதேர்ச்சையாக தாக்கி, அச்சிங்கள சாரதி மரணித்தது. இதே நிகழ்வில், அச்சிங்கள சாரதியை தாக்கியது சிங்கள இளைஞர்கள் என்றால் அல்லது தாக்கியவர்களும் தாக்கப்பட்ட சாரதியும் முஸ்லிம்களாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வாக அந்நிகழ்வு பார்க்கப்பட்டு பத்திரிகையில் சிறியதொரு பெட்டிச் செய்தியாக கடந்து செல்லப்பட்டிருக்கும் அல்லவா! பொலிசார் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதுடன் அந்நிகழ்வு முடிவு வந்திருக்கும், அவ்வளவே. இங்கு தாக்கப்பட்ட சாரதி என்பதன் முன்னிருக்கும் ‘சிங்கள’ என்ற அடையாளம் ஏற்கனவே அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்ததன் விளைவே அம்மோசமான இனவாதத் தாக்குதல். நமது அன்றாட வாழ்வில் அருகில் வசிக்கும் சக சிங்கள சமூகத்தவர்களுடன் சாதாரணமாக நடக்கும் எந்தவொரு பிசகும், தகராறும், ஏன் விபத்தும் கூட இனமைய நோக்கில் பாரிய இனத்தாக்குதலாக பரிணமிக்கும் அனைத்து சாத்தியங்களும் அன்று தோற்றுவிக்கப்பட்டிருந்தன.
2.அமைச்சரவை தெரிவில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விவாதம். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான அனைத்து அமைச்சரவைகளிலும் முஸ்லிம்கள் பங்கெடுத்துள்ளனர் என்ற அடிப்படையிலிருந்தே இவ்வாதம் எழுந்தது. இனவாதத்தை முன்னிறுத்தி தேர்தல் வெற்றியினை ஈட்டிய கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் அமைச்சர் இருந்தனர். இச்சர்ச்சை குறித்து பல தரப்பினரும் வலுவான வாதங்களினை முன்வைத்தனர். அவற்றினை மீள உரைப்பது அவசியமற்றவை.
இங்கு ஒரு விடயத்தினை மாத்திரம் சுட்டிக் காட்ட முடியும். அது ‘பிரதிநிதித்துவம்’ பற்றிய வாதம் நவீன கால அரசியல் வரலாறு நெடுகிலும் எவ்வளவு முக்கியம் பெற்றிருந்தன என்பது. உலக நாடுகளில் பல தங்களது முன்னைய மன்னராட்சியை தூக்கியெறிவதில் மக்கள் பிரதிநிதிகளாக அம்மன்னர்கள் அமையவில்லை என்பது முக்கிய காரணமாயமைந்தன. இதேபோன்று காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டங்களின் பின்னனியில் தொழிற்பட்ட ஊக்கு சக்தியும் காலனியவாதிகள் அந்நாடுகளின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதே. காலனிய சக்திகள் தங்களின் ஆட்சியின் சட்டபூர்வத் தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள கையாண்ட வாதமும், காலனிய நாட்டின் சுதேசிகள் இன்னும் ஆட்சிக்கு தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே.
மேற்கின் அரசியல் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய குடியரசுவாத மரபினதும், தாராளவாத மரபினதும் அடித்தளமாக அமைந்தவை பிரதிநிதித்துவம் பற்றிய கரிசனையே. அரசிலமைப்புவாதம்(Constitutionalism) சார்ந்த மேற்கின் குடியரசுவாத மரபும், தாராளவாத மரபும் பல அரசியல் நிறுவனங்களையும், ஒழுங்குகளையும் இதற்காகக் கண்டடைந்தன. இம்மரபுகளின் பிரதிநிதித்துவம் பற்றிய வாதத்தின் தொடர்ச்சியே நாம் இன்று காணும் பல அரசியல் பிரதிநிதித்துவ நிறுவனங்கள். ஒரு குழுவினரிடம், ஒரு தரப்பினரிடம் அதிகாரம் குவிக்கப்படல் எதேச்சதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் என்ற வகையிலேயே அரசின் அதிகாரம் சட்டம், நிர்வாகம் மற்றும் நீதி என பிரிக்கப்பட்டன. சமஷ்டி ஒழுங்கு, ஜனநாயக முறைமை மற்றும் இவற்றை தாங்கி நிற்கும் நிறுவனங்கள் என்று விரிவாக உரையாட முடியுமான விடயம் இது.
இலங்கை போன்ற இனவாதம் / பெரும்பான்மைவாதம் கட்டமைப்பு ரீதியாக நிலைகொண்டுள்ள நாட்டில், நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியில் இனவாதத்துக்கான தீர்வு காணப்படும் வரையில், அடையாள ரீதியில் பெயரளவிலேனும் அமைச்சரவையில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் அவசியமானது. தங்களுக்கெதிரான விடயங்கள் நாட்டின் உயர் அரசியல் அவையில் நிறைவேற்றப்பட முடியும் என்ற நியாயமான பதட்டம் சிறுபான்மையினரிடம் காணப்படுவது இயல்பானது. உங்களுக்கான பிரதிநிதியாக நாங்கள் செயற்படுகின்றோம் என்ற வாதங்கள், பிரதிநிதித்தும் பற்றிய அடிப்படைப் புரிதலற்றவை. இப்புரிதலின் அடிப்படையிலேயே சில நாடுகள் நாட்டின் உயர் பதவிகளை சுழற்சி முறையிலோ அல்லது ஒதுக்கீடு அடிப்படையிலோ பல இன, மத குழுக்களிடம் ஒப்படைக்கின்றன. தேவையற்ற நம்பிக்கையீனத்தையும், சந்தேகத்தையும் இல்லாதொழிக்க இத்தகைய ஏற்பாடுகள் அவசியமானவை. நாட்டின் இறையாண்மையில் நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களையும் பங்கெடுக்கச் செய்வதே, அவர்களை நாட்டின் குடிமக்களாக உணரச் செய்யும்.
மேலும், அமைச்சரவை நியமனத்துக்கு அனுபவம் மற்றும் தகைமை என்பவற்றை முன்நிபந்தனையாக்கல் சிக்கலானது. பரீட்சை வைத்து நாம் மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதில்லை. அடுத்து, படித்தவர்கள் தகுதியானவர்கள் என்ற பாமரத்தனமான புத்தியும் கூட இது. தகைமையை முன்நிபந்தனையாக்கல் ஏன் சிக்கலானது. இந்தியா போன்ற பாரிய சாதிய ஏற்றத்தாழ்வுள்ள நாட்டில் தலித்களுக்கும், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் அரசியலமைப்பு ரீதியாகவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன. தகைமை என்று பார்த்தால் மிகவும் பிந்தங்கிய நிலையிலிருக்கும் இவர்களுக்கான மீட்சியினை இவ்வாறான ஏற்பாடுகள் மூலமே குறைந்தபட்சம் சாத்தியப்படுத்த முடியும். இவர்களின் பிரதிநிதியாக சாதி அடிப்படையில் தனக்கான அனைத்து முன்னுரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கும் உயர் சாதியை சேர்ந்த ஒருவர் இருக்க முடியும் என்று வாதிப்பது அநீதியானது என்ற ரீதியிலேயே இவொதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அனுபவத்திலும் நாட்டின் திவால் நிலைக்கு காரணமாயமைந்தவர்கள் சாதாரண பாமர மக்களல்ல; நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து தொடர்ந்து வந்த அரசியல்வாதிகளில் பலர், உலகின் முன்னனி பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்றவர்களே. இலங்கையின் 76 வருட கால கரைபடிந்த அரசியல் என்று இதனைத் தான் நாம் அழைக்கின்றோம்.
3. மாகாண சபை பற்றிய விவகாரத்திலும் தெளிவானதொரு நிலைப்பாட்டினை தே.ம.ச. வெளிப்படுத்தவில்லை. இந்திய அனுசரனையுடன் இலங்கையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட ஒழுங்கு என்ற வகையில் ஜே.வி.பி. இம்முறைமை குறித்தும் எதிர்மறை நோக்கினையே கடந்த காலங்களில் வெளிப்படுத்தி இருந்தது. இன்று ஆளும் அரசாங்கம் என்ற வகையில் இம்முறைமை குறித்து நிலைப்பாட்டினை தெளிவாக வெளிப்படுத்துவதில் தயக்க நிலையினை கொண்டுள்ளது. இதனை விட சிறந்த முறைமை ஒன்றினை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் உள்வாங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சமிஞ்சைகளின் படி, மாகாண சபை முறைமையினை புதிய அரசியலமைப்புக்குப் பிறகு தொடரப் போவதில்லை என்பது ஓரளவு தெளிவானது. ஆனால், புதிய முறைமை இனப் பிரச்சினைக்கான தீர்வினை எந்தளவு சாத்தியப்படுத்தும் என்பது எதிர்கால நடவடிக்கைகள் மூலமே யூகிக்க முடியுமாக இருக்கும்.
இறுதியாக….
தே.ம.ச. இலங்கையின் அரசாங்கத்தினை பொறுப்பெடுத்துள்ள இக்கால கட்டம் இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் முக்கியமானவை. அது தனக்கு அனைத்து இனத்தவர்களிடமிருந்தும் அளிக்கப்பட்ட மிதக்கும் வாக்குகளை நிலையான வாக்கு வங்கியாக மாற்ற வேண்டுமாயின், பாரிய பொருளாதார நெருக்கடி, அரசின் அனைத்து மட்டங்களிலும் கட்டமைப்பு ரீதியாகவே நிலைப்படுத்தப்பட்டுள்ள பேரினவாதம் என்பன உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய அதன் முன்னுரிமைகளாக அமைய வேண்டியவை. நாட்டின் சட்டவாக்கத் துறையான பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மைப் பலமும், புதிய அரசியலமைப்புக்கான மக்கள் ஆணையும் தே.ம.ச.க்கு வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியதிகாரத்தினையும், பதவிகளினையும் இழந்த முன்னைய அரசியல் உயர்குழாத்தினர்கள் தமக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தே.ம.ச. எடுக்கும் ஒவ்வொரு நகர்வும் அதன் எதிர்கால அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடியவை.
நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் சமூகத்தின் கீழ்தட்டு எளிய மக்கள் மீது சுமத்தப்படுவதும், வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி சார்ந்த சுட்டிகளில் நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பிடலும் முன்னைய அரசாங்களிலிருந்து வேறுபட்ட பிம்பத்தினை தே.ம.ச.க்கு வழங்கப் போவதில்லை. இவ்வாறான முன்னெடுப்புகள் பொருளாதார நெருக்கடிக்கான உண்மையான தீர்வாகவும் அமையப் போவதுமில்லை.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகள் நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியாக வழங்கப்பட வேண்டியவை. நீண்ட காலமாக கட்டமைப்பு ரீதியாக இனத்துவக் கூறுகள் புரையோடிப் போயுள்ள அரசின் அனைத்து மட்டங்களிலிருந்தும் பேரினவாதத்தை கலைவது இவ்வகையிலேயே சாத்தியமானது. புதிய அரசியலமைப்பும், அதன் பின்னனியில் இயற்றப்படும் சட்டங்களும் இனப் பிரச்சினைக்கான நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான அரசியல் தீர்வுகளை முன்மொழியும் வகையில் அமையாத விடத்து, தே.ம.ச.யினால் இனப் பிரச்சினைக்கான நியாயமானதும், சாத்தியமானதுமான தீர்வினை வழங்க முடியாது. மேலும், புதிய அரசிலமைப்புக்கு முன்னர் வட-கிழக்கில் காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ்க் கைதிகள் விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்ட நீக்கம் போன்ற பல பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள். இவ்வாறான முன்னெடுப்புகள் புதிய அரசியலமைப்பு பற்றிய நம்பிக்கையூட்டக் கூடிய சாதகமான சமிஞ்சைகளாக அமைய முடியும்.
இலங்கையில் பொதுப் புலத்தினை பொருத்தளவில், இடதுசாரி முகாமினைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியாகவே தே.ம.ச(அல்லது ஜே.வி.பி) கருதப்பட்டு வருகின்றது. 1970களில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் இடதுசாரிகள் கடைபிடித்த பொருளாதாரக் கொள்கையின் தோல்வியும், ஜே.வி.பி. இயக்கம் ஆரம்ப காலங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்ட கிளர்ச்சிகள் பற்றி நீடித்து வந்த பொதுமக்களின் எதிர்மனநிலையும் 2022 ஆம் ஆண்டு அரகலய வரைக்கும் இடதுசாரி அரசியலுக்கான அரசியல் வெளியினை வழங்க மறுத்தே வந்தது. இந்நிலையிலான பாரிய மாற்றமாக அரகலயவிற்கு பின்னரான சூழல் அமைந்துள்ளது. தே.ம.ச.க்கு மட்டுமல்ல, எதிர்கால இலங்கையின் இடதுசாரி அரசியலுக்கான வெளி மீள் நிர்ணயிக்கப்படப் போகும் வரலாற்றுக் காலம் இது.
“புரட்சிகள் நடைபெறுவதும், அரசாங்கங்கள் மாற்றப்படுவதும் பொருளாதாரத் திறமையின்மையாலும், அதிகார வர்க்கத்தின் நெகிழ்ச்சியற்ற தன்மையாலும் தானே தவிர, பதவியேற்ற புதிய அரசாங்கங்கள் வெளியே சொல்லிக் கொள்ளும் காரணங்களால் அல்ல” என்பார் அரசியல் ஆய்வாளர் பேனட் க்ரிக்.
மனாசிர் ஸரூக் – பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் M.A பட்டம் பெற்று இருக்கிறார். தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகிறார். இடதுசாரி சிந்தனை அமைப்பு, விடுதலை இறையியல் சார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி வருபவர்.